நான் மதிக்கும் ஒரு சில அரசியல் தலைவர்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு ஐயாவும் ஒருவர்.
“என்றும் எளிமை” இது தான் அவரோட அடையாளம், மிக சிறந்த மனிதர், ரொம்ப நல்லவரா இருக்குறதுனால தமிழக மக்கள் நிரந்தரமா அவர கண்டுக்குறது இல்ல.
1929 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்தவர்,தனது 15வது வயதில் தன்னை கம்யூனிச சித்தாந்தத்தோடு இணைத்துக் கொண்டார். தன் வாழ்நாள் முழுவதும் நாட்டு மக்கள் பிரச்சனைக்காக எந்த ஒரு “சுய விளம்பரமும்” இல்லாம போராடியவர்.இன்றும் கட்சி தருகிற சொற்ப மாத சம்பளத்தில் தன் தேவைகளைப் சுருக்கிக்கொண்டு மக்களக்காக பாடுப்பட்டு வருகிறார். ஒரு தலைவன் எப்படி எளிமையாக ,ஒழுக்கமாக, கண்ணியமாக இருக்க வேண்டும் என்பதற்க்கு இவரை விட சிறந்த எடுத்துக்காட்டு இருந்துவிட முடியாது.
1968ஆம் ஆண்டில் இருந்து 1991 ஆண்டு வரை ‘தமிழ்நாடு விவசாய தொழிலாளர் ‘ சங்கத்தின் செயலாளராக இருந்தவர்.பின் தமிழக கம்யூ கட்சியின் மாநில செயலாளராக செயல்பட்டார்,2005யில் இருந்து இந்திய கம்யூ நிர்வாகக்குழு உறுப்பினராக இருந்து வருகிறார்.
நாலு வேட்டி,சட்டையை வைத்து கொண்டு,கட்சி சம்பளத்தில் மிக எளிமையாக வாழும் நல்லகண்ணு ஐய்யாவின் 80வது பிறந்தநாளில் அவரது வாழ்நாள் தியாகத்தை மரியாதை செலுத்தும் விதமாக, கம்யூ கட்சி இந்தியா முழுவதும் நிதி திரட்டி கொடுத்த 1 கோடி ருபாய் காசை அதே மேடையில் கட்சிக்காகவே திருப்பி கொடுத்த மாபெரும் தலைவர்.
ஒரு முறை அலங்கரிக்க பட்ட ஆடம்பர மேடையில் பேச ஐய்யாவை அழைத்த போது, ‘நாட்டு கஷ்டத்தை இத்தனை அலங்கார விளக்குப் போட்டா பேசுவது’ என்று கோபப்பட்டார்.
பல பல சமயங்களில் ‘விளம்பரம்’ இல்லாமல் மக்கள் பிரச்சனைக்காக களத்தில் இறங்கி போராடியவர். அதுக்கு மக்கள் குடுத்த வெகுமதி 1977 சட்டசபை தேர்தலில் சந்தானத்திடமும,1999 லோக்சபா தேர்தலில் சி.பி.ராதாக்ருஷ்ணனிடம் நல்லக் கண்ணு தோல்வியுற்றார்.
ஊழல், லஞ்சம்னு எந்த ஒரு பரபரப்பு இல்லாத காரணத்தினால் மீடியாவும் அவரை எப்பவும் கண்டுக்குறது இல்ல.
இன்றைய தேதிக்கு மீடியா ஒரு மிக சிறந்த வியாபார சந்தை. மீடியா தன்னோட லாபத்துக்காக அவரை ஒதுக்குவது என் பார்வைக்கு தப்பா தெரியல.நாம என்னைக்கு “வயலும் வாழ்வும்” பார்த்தோம், “ஒலியும் ஒளியும்”க்கு தானே முக்கியத்துவம் கொடுத்தோம். அதனால தான் இப்ப அவங்க “வயலும் வாழ்வும்” போடுறதில்ல,எந்த டிவி சேனல் பார்த்தாலும் பாட்டு,காமெடி தான் ஓடுது.
நாளைக்கே நாம எல்லாரும் விவசாயதுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்னு வெச்சுபோம் ( சிரிக்கப்புடாது சும்மா ஒரு காமெடிக்கு )
அப்புறம் எந்த டிவி சேனல்ல பார்த்தாலும் விவசாயம் சம்பந்தபட்ட நிகழ்ச்சி,பாட்டு தான் ஓடும்.அப்பதான விளம்பரத்தோட விலைய ஜாஸ்திய கேட்கமுடியும்.நம்மளோட ‘கவனம்’ தான் அவங்களோட Trend,பிசினஸ் எல்லாமே.அதனால மீடியாவ குறை சொல்றது அர்த்தம் இல்லை, ஒரு வியாபாரிகிட்ட இருந்து இந்த அளவு நாகரிகத்தை தான் எதிர் பார்க்க முடியும்.
சாதாரண மொபைல் போன்,பைக் வாங்குறதுக்கு கூட எல்லா வெப்சைட்டையும் அலசி ஆராயும் நாம , ஏனோ நம்மல ஆளுறதுக்கு தகுதினா தலைவனை அடையாளம் காண முயற்சி எடுக்கிறது இல்ல என்பது வெட்க படவேண்டிய விஷயம்.
ஒரு நல்ல தலைவனை தேர்ந்து எடுக்காட்டியும் பரவால்ல, அடையாளம் கண்டுக்கொள்ள கூட தெரியாத இந்த மக்களுக்கு ஊழல் செய்யும் எந்த ஒரு அரசியல் கட்சியையும் கேள்வி கேட்கும் தகுதி கிடையாது.சரியான வேலையாட்கள் தேர்வு செய்யாமல் மெத்தனமாக இருந்து விட்டு பின் வேலையாட்களை குறைகூறும் முட்டாள் முதலாளியைப் போல் தான் நாமும்.
சிறந்த தலைவனுக்கு உண்டான எல்லா தகுதியுடன் மிக அமைதியாக “நல்ல கண்ணு” என்கின்ற ஒரு சுடர் நம் முன் 90வயதை தாண்டி எரிந்து கொண்டிருக்கின்றது.
இனியும் விழிப்புணர்வு இல்லாமல் லஞ்சம், ஊழலை பார்த்து “விழி” பிதுங்கி அலைய போகிறோமா ? என்பது நம் கையில் தான் இருக்கிறது.
-ஷேக் அப்துல்லா.